Thursday, July 22, 2010

பள்ளிக்கூடம்

ஒன்னாம் பெல் அடித்தால் அதிகரிக்கும் ஆரவாரம்,
ரெண்டாம் பெல் அடித்தால் அடங்கிப்போகும்.
நீராரும் கடலுத்த முடிந்தவுடன் நிரம்பிப்போகும் வகுப்பறையில்,
ஓரெண்டு ரெண்டு ரெண்ட்ரெண்டு நாலு என கூவும் பிள்ளைகள்,
மதிய சாப்பாட்டிற்கு மணி அடித்ததும்,
சத்துணவிற்கு வரிசையில் இடம் பிடிக்க பறக்கும்,
நீரென சாம்பாரும், தோலுரிக்காத அவித்த முட்டையையும்
வயிறார உண்டு களித்ததும்,
தட்டைக் கழுவி பைக்குள் போட்டுவிட்டு,
கண்ணாமூச்சி, நொண்டி என விளையாடும்,
ஜோடி புறாவும் அளவிலா குதூகலம் தரும்.
மீண்டும் ஒன்னாம் பெல் அடித்தால் அதிகரிக்கும் ஆரவாரம்,
ரெண்டாம் பெல் அடித்தால் அடங்கிபோகும்.
மீண்டும் ஆரம்பிக்கும் ஓரெண்டு ரெண்டு.
போட்டோக்காரர் வந்துவிட்டார் என்றதும்
மகிழ்ந்து போகும் முகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக்கொண்டு சிரித்துக்கொள்ளும்.
கிழிந்த சட்டையை ஊக்குப்பின் குத்தி சரி செய்யும்.
என் பக்கத்தில் நீ, உன் பக்கத்தில் நானென நினைக்கும்.
உயரப்படி நிற்க வைக்கப்படும்போது வாடிப்போகும்.
சிலர் சிரித்துக்கொண்டு, சிலர் தூங்கிக்கொண்டு,
சிலர் உம்மென்று,சிலர் யாரையோ பார்த்துக்கொண்டு...
இப்போது நானும் இந்த புகைப்படத்தில்
என்னை மறந்துகொண்டு...

Friday, July 9, 2010

நல்லான்


நன்று செய்தல் எல்லோருக்கும் நன்று.
தீது செய்தல் தனக்கு மட்டும் நன்று.
விடிந்து பார்த்தால் வெளிச்சமில்லை,
வாசலில் அல்ல..
தீது செய்தவன் மனதில்.
பார்த்தவன் தீயவன் இல்லை,
தீமை செய்யப்பட்ட நல்லவன்,
இன்றாவது விடிந்ததா என்று.